tamilnadu

img

கொரோனாவுக்கு கியூபா மருந்து- த.வி.வெங்கடேஸ்வரன்

கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கூபா’ (கியூபா)  மருந்து என்று சொல்லப்படுவது என்ன? அது எப்படி உருவானது? அதன் பயன் என்ன? கொரோனா பாதிப்பில் அதனை பயன்படுத்துகிறார்களா? இந்தியாவில் அதனை பயன்படுத்த கூபாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா? சர்வதேச அளவில் சர்ச்சை ஏன்?

கூபா மருந்து என்று சொல்லப்படுவது என்ன?
‘2 பி ஆல்பா இன்டர்ஃபெரான்’ எனப்படும் புரதத்தை தான் வழக்கில் ‘கூபா மருந்து’ என கூறுகிறார்கள். தன்னை வேட்டையாட புலி வருவதை கண்ட ஒரு குரங்கு குரல் எழுப்பி மற்ற குரங்குகளுக்கு எச்சரிக்கை செய்வது போல வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் செல்கள் இன்டர்ஃபெரான்கள் எனப்படும் சைடோகைன்ஸ் வகை சார்ந்த செல் சமிக்ஞை செயலூக்கி புரதங்களை வெளிப்படுத்தும். சமிக்ஞை செயலூக்கி புரதங்கள் அருகில் உள்ள செல்களை சென்றடையும் போது மிக மிக அருகில் உள்ள செல்கள், தமக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என கருதி, தற்கொலை செய்துகொள்ளும். வேறு செல்கள் வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் புரதங்களை தயார் செய்து எதிர்கொள்ள தயார் ஆகும்.

மனித செல்களில் உருவாகும் இந்த சமிக்ஞை செயலூக்கி புரதங்களை முதன் முதலில் செயற்கையாக உயிரி தொழில்நுட்ப முறையில் உருவாக்கி தயார் செய்தது கியூபா. உணவுக்கு அரிசி வேண்டும் என்றால் பயிர்த் தொழில் செய்யவேண்டும். அதுபோல மருந்தாக பயன்படுத்த இந்த புரதங்களை அதிக அளவில் தொழில் முறையில் தயார் செய்யவேண்டும் எனில் மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்த புரதத்தை உருவாக்கும் மனித மரபணுவை இனம் கண்டு அந்த மரபணுவை செயற்கையாக பாக்டீரியாவில் புகுத்தி, அந்த பாக்டீரியா உமிழும் இன்டர்ஃபெரான்களை அறுவடை செய்து மருந்தாக பயன்படுத்துவது தான் கியூபா தொழில்நுட்பம். ஆல்பா, பீட்டா, காமா என மூன்று வகை இன்டர்ஃபெரான் புரதங்கள் உண்டு. இதில் ஆல்பா மற்றும் பீட்டா வகையை தான் கியூபா தயார் செய்கிறது.

உருவானது எப்படி?
அளிக்ஸ் ஐசாக் (Alick Isaacs) மற்றும் ழான் லின்டேன்மான் (Jean Lindenmann) எனும் ஆய்வாளர்கள் இந்த புரதத்தை முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். 1970களில் அமெரிக்க புற்றுநோய் மருத்துவர் கிளார்க் லீ என்பார் (Clark Lee) தன்னுடைய சிகிச்சையில் இன்டர்ஃபெரான்களை பயன்படுத்த துவங்கியிருந்தார். அந்த சமயத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தலைமையில் ஒரு குழு கியூபாவுக்கு விஜயம் செய்தது. அதில் கிளார்க் லீயும் இடம் பெற்று இருந்தார். கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவை சந்தித்த லீ, மரபணு மருத்துவம் தான் எதிர்காலம் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் காஸ்ட்ரோ இரண்டு ஆய்வு மாணவர்களை லீயின் ஆய்வுக் கூடத்தில் மரபணு தொழில்நுட்பம் கற்க அனுப்பினார். முதன் முதலில் இன்டர்ஃபெரான் மூலக்கூறுகளை பிரித்து எடுத்த ஆய்வாளர் காரி கேன்டேல் என்பவரின் ஆய்வகத்தில் கல்வி கற்க வேறுசில கியூபா ஆய்வாளர்கள் சென்றனர்.

ஆய்வுக் கூடத்தில் பிரித்து எடுத்து ஆய்வதற்கு குறைவான அளவே இன்டர்ஃபெரான் வேண்டும். எனவே அதே முறையை கையாண்டு பரவலான பயன்பாட்டுக்கு மருந்து தயாரிக்க முடியாது. மருந்தாக பயன்படுத்த வேண்டும் என்றால் கூடுதல் அளவில் இன்டர்ஃபெரான்களை உற்பத்தி செய்யவேண்டும். இது தான் அன்று இருந்த தொழில்நுட்ப சவால். எந்த மனித மரபணுக்கள் இந்த புரதத்தை உருவாக்குகிறது எனக் கண்டு அந்த மரபணுக்களை பாக்டீரியா மரபணுவில் புகுத்தி மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா உருவாக்கலாம். அந்த பாக்டீரியா மனித இன்டர்ஃபெரான்களை உற்பத்தி செய்யும் அதனை பிரித்து எடுத்து மருந்தாக பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்தை தான் கியூபா ஆய்வாளர்கள் உருவாக்கினர். கியூபா ஆய்வாளர்கள் “சென்டர் ஃபார் ஜெனெட்டிக் என்ஜினியரிங் அண்ட் பயோ டெக்னாலஜி (CIGB)” என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினர். உலகின் முதன் முதல் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இது.

சீனாவில் கையாண்ட மருத்துவ சிகிச்சை முறைகளை தொகுத்து வெளியிடப்பட்ட மருத்துவ கையேட்டில் நோய் முற்றும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இன்டர்ஃபெரான் பயன்பாட்டை பரிந்துரை செய்கிறார்கள்.

பயன் என்ன?
1980களில் கியூபாவில் டெங்குக் காய்ச்சல் பரவியபோது அந்த நோயாளிகளை குணப்படுத்த முதன் முதலில் இந்த மருந்து பெருமளவில் பயன்பட்டது. அதன் பின்னர் டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களுக்கும் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கவும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்று முற்றிய நோயாளிகளில் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் அதனை பயன்படுத்துகிறார்களா?
நாவல் கொரோனா வைரஸ்சால் ஏற்படும் கோவிட்19 நோய் ஒரு வைரஸ் தொற்று நோய். பலருக்கு எந்த மருந்தும் தேவையில்லை. தானே குணமாகிவிடும். சிலருக்கு நோய் முற்றிய நிலையில், நுரையீரல் முழுவதும் நோய் கிருமி பரவிய நிலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டு செல்கள் அழிந்து போகும். கையைவிட்டுப் போன நிலையில் இன்டர்ஃபெரான்களை சுவாசக் குழாய் வழி செலுத்துவதன் மூலம் நோய் தொற்றா செல்களை விழிப்படைய செய்து மற்ற செல்களுக்கு நோய் பரவுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். சீனாவில் கையாண்ட மருத்துவ சிகிச்சை முறைகளை தொகுத்து வெளியிடப்பட்ட மருத்துவ கையேட்டில் நோய் முற்றும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இன்டர்ஃபெரான் பயன்பாட்டை பரிந்துரை செய்கிறார்கள். மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்தினால் பெரும் ஆபத்து.

நோய் அற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இன்டர்ஃபெரான் பயன்படுத்துவது இல்லை. கிருமி தாக்கி முற்றுவதற்கு முன்னரே இன்டர்ஃபெரான் மருந்தை பயன்படுத்தக்கூடாது. கூடுதலாக இன்டர்ஃபெரான் புகுத்தும் பொது கிருமியை அழிக்கும் செல்கள் பல சமயம் நல்ல செல்களையும் அழித்துவிடும். ஆபத்து இல்லாத செல்கள் கூட தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் குறிப்பிட்ட அளவு நோய் முற்றிய நோயாளிகளுக்கு மட்டுமே இன்டர்ஃபெரான் சிகிச்சை தரப்படுகிறது. மற்ற எல்லா மருந்துகளை போலவே இந்த சிகிச்சை கொரோனா நோயில் எவ்வளவு தொலைவு பயன் தரும் என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சர்வதேச சர்ச்சை ஏன்?
கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்த மருந்தை அமெரிக்கா விதித்தும், பிற நாடுகளில் இப்போது எளிதில் இறக்குமதி செய்ய முடிவதில்லை. வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கியூபாவிலிருந்து இந்த மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என மேலை நாடுகளில் குரல் வலுத்துள்ளது. அதேபோல தென் அமெரிக்க நாடுகளில் சில சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களில் கியூபாவை ஒதுக்கி வைக்கும் போக்கில் இருந்தன. அவையும் இப்போது கியூபாவின் மருத்துவர்கள் மற்றும் இந்த மருந்தின் தேவையை உணர்கிறார்கள்.

அறிவு சொத்துரிமை என்ற பெயரில் மருந்துக்காக பயன்படும் மூலக்கூறுகளை சொத்துரிமை கொண்டாடி மற்றவர்கள் உற்பத்தி செய்யாமல் தான் மட்டுமே உற்பத்தி செய்து லாப நோக்கில் மட்டும் செயல்படும் போக்கை கியூபா ஒப்பவில்லை. அறிவு சொத்துரிமை இல்லாத காரணத்தினால் எந்த ஒரு முன்னணி மேலை நாட்டு மருந்து கம்பெனியும் இந்த மருந்தை தயார் செய்ய முன்வரவில்லை. எந்த நாடுகள் எல்லாம் முன் வருகிறதோ அங்கே இந்த தொழில்நுட்பத்தை கூட்டாக அமைத்து அதன் பின்னர் படிபடியாக தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் படியாக கியூபா செயல்படுகிறது. ஏற்கனவே சீனாவில் இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. “மனித ஆரோக்கியம் ஒரு வணிகச் சொத்து அல்ல, அடிப்படை உரிமை என்பதை உலகம் புரிந்து கொள்ள தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என இந்த மருந்தை உருவாக்கிய கியூபா ஆய்வாளர் லூயிஸ் ஹேர்ரேரா (Luis Herrera) கூறுகிறார். இதே போலத் தான் மலேரியாவிற்கு மருந்தாக பயன்படும் ஆர்டிமிஸினினை சீனா கண்டுபிடித்த பொது எந்த மேலை நாட்டு முன்னணி மருந்து நிறுவனமும் உற்பத்தி செய்ய முன்வரவில்லை. சர்வதேச சுகாதார அமைப்பு பெருமுயற்சி செய்து தான் மருந்து தயார் செய்ய உந்த முடிந்தது.

இந்தியாவில் பயன்படுத்த கியூபாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டுமா?
தேவையில்லை. இந்த மருந்தை இந்தியாவில் தயார் செய்கிறார்கள். மரபணு மாற்ற பாக்டீரியா கொண்டு இன்டர்ஃபெரான் உற்பத்தி செய்ய கியூபா தொழில்நுட்பம் கண்டுபிடித்து இருந்தால், இந்திய ஆய்வாளர்கள் ஈஸ்ட் கொண்டு தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உள்ளார்கள். முன்பு இந்திய அறிவு சொத்துரிமை சட்டத்தின் படி ஒரு பொருளை அறிவு சொத்துரிமையாக பதிவு செய்ய முடியாது. அதை உற்பத்தி செய்யும் செய்முறையை மட்டுமே சொத்துரிமையாக பதிவு செய்ய முடியும். எனவே கியூபா முறைக்கு வேறுபட்ட செய்முறை கொண்ட உற்பத்தி முறையில் இந்தியாவில் இந்த மருந்து தயார் செய்யப்படுகிறது. எனவே இந்த மருந்து தாராளமாக இந்தியாவில் கிடைக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை கூடி தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஏற்படும். சில மேலை நாடுகளில் கியூபா மீது தடை இருப்பதால் அவர்களிடம் இது இல்லை. 

த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞான் பிரச்சார் மூத்த விஞ்ஞானி